நிர்வாகக் குளறுபடிகள் மட்டுமன்றி, நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களும் துணைவேந்தர் சூரப்பா மீது தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன்  வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரிப்பதற்குத் தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ள நிலையில், அவர் பதவியில் நீடிப்பது சரியானது அல்ல. எனவே, அவரை உடனடியாக இடைநீக்கம் செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராகப் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. சூரப்பாவின் காலத்தில் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் 1978க்கு உட்பட்டவையாக உள்ளனவா? அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்கள், முறையாகச் செய்யப்பட்டுள்ளனவா? பல்கலைக்கழகத்தால் வசூலிக்கப்பட்ட கட்டணம், நன்கொடை , நிதி நல்கை போன்றவை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? உள்ளிட்டவற்றை நீதிபதி கலையரசன் ஆணையம் விசாரிக்கும் என்று தமிழக அரசின் அரசாணை தெரிவிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


சூரப்பாவுக்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த சுரேஷ், 'சேவ் அண்ணா யுனிவர்சிட்டி' அமைப்பைச் சார்ந்த சி.வரதராஜன், செல்லதுரை மற்றும் ஆர்.ஆதிகேசவன் உள்ளிட்டோர் புகார்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமெனில் அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் ஆளுநரே அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
அந்த விசாரணை ஆணையம் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலோ அல்லது தலைமைச் செயலாளர் தகுதியில் உள்ள அதிகாரி ஒருவரின் தலைமையிலோ இருக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகச் சட்டம்-1978 இன் பிரிவு 4ஏ கூறுகிறது. அதன் அடிப்படையிலேயே இப்போது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் குளறுபடிகள் மட்டுமன்றி, நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களும் துணைவேந்தர் சூரப்பா மீது தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்.