thirumavalavan mutharasan calling vaiko from prison

தேசத்துரோக வழக்கில் ஜாமீனில் வெளிவரமாட்டேன் என அடம் பிடித்து புழல் சிறையிலேயே அடைந்து கிடக்கும், வைகோ சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 2009 ம் ஆண்டு, ஒரு பொது கூட்டத்தில் பேசிய வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 3 ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜரான வைகோ, தாம் குற்றவாளி இல்லை என்பதால், ஜாமினில் வெளிவர மாட்டேன் என்று கூறி, புழல் சிறையில் அடைந்து கிடக்கிறார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் ஆகியோர், சிறையில் நேற்று அவரை சந்தித்து, வெளியே வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இது நட்பு ரீதியான சந்திப்புதான், அரசியல் எதுவும் பேசவில்லை என்று, தெரிவித்தனர். 

அவர் விரைவில் ஜாமினில் வந்து அரசியல் பணிகளை தொடர வேண்டும் என்று கேட்டு கொண்டோம். எங்கள் வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொள்வாரா? என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வைகோ, புழல் சிறைக்கு சென்று, 35 நாட்களுக்கும் மேல் ஆகி விட்டது. ஆனால், அதுகுறித்து அரசியலில் எந்த சலசலப்பும் இல்லை. அவர் வந்தாலாவது, கொஞ்சம் ஊடகங்களுக்கும், நெட்டிசன்களுக்கும் தீனி போடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

மேலும், டாக்டர் பீலே எனக்கு விசிட்டிங் கார்ட் கொடுத்தார், எடப்பாடி முதல்வர் ஆவதற்கு முன்பே எனக்கு நண்பர் என, பல விஷயங்களை அவர் பேசினால்தான், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கும்.

அத்துடன், நமது நெட்டிசன்களும், மீம்ஸ் போடுவதற்கு எதுவும் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். 

எனவே, திருமா, முத்தரசன் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, சிறையில் இருந்து சிங்கம் வெளியே வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.