தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தனக்கு நம்பிக்கை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

விசிக தலைவர் திருமாவளவன் கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது  அவரிடம், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த திருமாவளவன், “நாடாளுமன்ற தேர்தல் முடிந்து கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. தமிழகத்தில், திமுக கூட்டணிக்கு 30 இடங்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது நல்ல செய்தி தான். இருந்தாலும் எனக்கு கருத்துக் கணிப்பில் நம்பிக்கை இல்லை. என்ன முடிவு என்பதை மக்கள் தெரிவிப்பார்கள். அதை வரும் 23ம் தேதி தெரிந்துகொள்ள உள்ளோம். திமுக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்பதே என் நம்பிக்கை” என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டன. பாஜக கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்றே பல ஊடக நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.