தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தவில்லை. எனவே இந்த வி‌ஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை ஒப்பிடக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் பேசிய அவர், ’’டெல்லி வன்முறை தேசிய அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. வன்முறை என்ற பெயரில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத் முதல்வராக முன்பு மோடி இருந்த போதும், அங்கு உள்துறை அமைச்சராக அமித்ஷா அமைச்சராக இருந்தபோதும் குஜராத்தில் இதுபோன்ற வன்முறை நடந்தது. டெல்லி வன்முறைக்கு பா.ஜ.க. அமைச்சர்கள் தூண்டுதல் தான் காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய குடியுரிமை சட்ட திருத்தம், குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை கர்நாடகாவிலும் அதைத்தொடர்ந்து ஆந்திராவிலும் பேரணி நடைபெற உள்ளது. ஆந்திராவில் நடைபெறும் பேரணி தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

தமிழகத்தில் இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த வி‌ஷயத்தில் அ.தி.மு.க. அரசு பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்தால் வருங்கால சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அ.தி.மு.க. பா.ஜ.க. கூட் டணியை தவிர்ப்பது நல்லது.

தமிழக சட்டசபையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவர்கள் இறப்புக்கு நேரில் சென்று அ.தி.மு.க. அஞ்சலி செலுத்தியது தமிழ்நாட்டில் நல்ல அரசியலுக்கு எடுத்துக்காட்டு. இது தொடர வேண்டும்.

தற்போது ராஜ்யசபா எம்.பி., பதவி தி.மு.க.- அ.தி.மு.க.வில் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் 2 பேருக்கும் அதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு ஏன்? எம்.பி. வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேட்கிறார்கள். இந்த கேள்வி தவறு. அ.தி.மு..க கூட்டணியில் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு வாய்ப்பு கேட்டு தலைவர்களை சந்தித்து வந்தனர். ஆனால், தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தவில்லை. எனவே இந்த வி‌ஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை ஒப்பிடக் கூடாது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எனக்கு ஏமாற்றம் என்று கூறியது என்ன என்பது அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சித்தலைமை மற்றும் முதல்வர் பதவி தொடர்பாக அவர் பேசினார் என்று தமிழருவி மணியன் கூறியது பற்றி தெரியாது. தமிழருவி மணியனை ரஜினி தனது செய்தித்தொடர்பாளர் என்று எப்போதாவது அறிவித்திருக்கிறாரா?. எனவே தமிழருவி மணியன் கூறியது அவரது சொந்த கருத்து’’ என அவர் தெரிவித்தார்.