வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட வேண்டும் என்றால்,  ஒவ்வொருவரும் தாங்களாகவே தங்களை தற்காத்து கொள்வதுதான் தீர்வு என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலகில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இதுவரை 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தமிழகம் 10 இடத்துக்குள் உள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் குறைந்த அளவே பரிசோதனைகள் நடைபெறுகின்றன. எனவே வைரஸ் தொற்று பாதிப்பும் குறைவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க உரிய காலத்தில் அடிப்படை மருத்துவ மற்றும் கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொள்ளவில்லை. இதுவே சமூக பரவல் தற்போது அதிகமாக ஏற்பட காரணம்.


வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட வேண்டும் என்றால்,  ஒவ்வொருவரும் தாங்களாகவே தங்களை தற்காத்து கொள்வதுதான் தீர்வு. அரசு என்ன செய்தது, ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்று  நினைப்பதைவிட விழிப்புணர்வுடன் இருந்து தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள வேண்டும். பொது முடக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு தற்சார்பு பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் போய்ச் சேரவில்லை. இது பெருத்த ஏமாற்றம் தருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் மத்திய அரசு உருப்படியாக எந்த செயல்திட்டத்தையும் வரையறுக்கவில்லை. இதுவும் வேதனையைத் தருகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சென்னை கோயம்பேடு தொழிலாளர்களால்தான் கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. அப்போதே அரசு அத்தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தவறிவிட்டது. மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு அதிகாரம் அளிப்பதோடு போதிய நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் மருத்துவ கருவிகளை வாங்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.