பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசு நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பின் மத சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது. ஏனெனில் 21 வயதுக்குட்பட்டு சாதி, மத வெறுப்பு திருமணம் நடைபெறுகையில் சம்பந்தப்பட்டவர்களை போக்சோ வழக்கில் கைது செய்ய இந்த சட்டம் வழிவகுக்கிறது. எனவே, இந்த திருத்த சட்டத்தை சாதி, மத மறுப்பு, திருமணத்தை எதிர்ப்பவர்களே ஆதரிக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதேபோல், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை இணைப்பதன் மூலம் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது தனக்கு வாக்களிக்காதவர்களை, வாக்களிக்காத சமூகத்தினரின் கணிசமான வாக்குகளை அதிகாரத்தை பயன்படுத்தி செல்லாதவையாக மாற்ற முடியும். எனவே இந்த திருத்தச் சட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், மீனவர்களை துன்புறுத்துவதும், படகுகளை முடக்குவதும் தொடர்ந்து வருகிறது. இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. மீனவர்கள் மீது தொடரும் இந்த தாக்குதல் வேதனையளிக்கிறது. இதனை விசிக கண்டிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பெரும்பாலும் நாடாளுமன்றத்துக்கு வந்து கூட்டத்தில் பங்கேற்பது அரிது.

அப்படியே வந்தாலும் நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்டு செயல்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடாவடி போக்குடன் அனைத்து சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றுகின்றனர். பிரதமரின் இந்த செயல் அவர், ஜனநாயக இரு அவைகள் மீதும், அரசியலமைப்பின் மீதும் எவ்வளவு அக்கறையாக செயல்படுகிறார் என்பதையே காட்டுகிறது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவின் போதும் அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். மற்ற யாரும் பங்கேற்பதில்லை என்று தெரிவித்தார்.