தமிழகத்தின் முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பொறுப்பேற்க உள்ளது குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யபட்டார். இதைதொடர்ந்து சசிகலா தமிழக முதலமைச்சராக வரும் பிப். 9 தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சசிகலாவை மக்கள் ஏற்பார்பார்களா என்பது இன்னும் 6 மாதத்தில் தெரிந்துவிடும் எனவும் சசிகலா எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சசிகலா தேர்தலில் வெற்றி பெறுவதும், முதல்வராவதும் சந்தேகம் தான் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஆட்சியை மக்கள் அதிமுகவிடம் கொடுத்துள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டமன்றகுழு தலைவராக தேர்வு செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் அவசரபடாமல் இருந்திருக்கலாம் எனவும் சசிகலாவை முதல்வராக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது எனவும் பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலாவை கருத முடியாது எனவும் சசிகலா முதலமைச்சராக வரும் போது மற்ற கட்சித் தலைவர்களும், தமிழக மக்களும் கேள்வி கேட்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
மக்கள் எண்ணத்திற்கு எதிராக அதிமுகவினர் செயல்பட்டுள்ளதாகவும், சசிகலாவை அதிமுகவினர் தேர்வு செய்திருப்பது ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு நேர்மாறானது எனவும் திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்திருப்பது அதிமுகவினர் உரிமை என காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதனை வரவேற்று பேசியிருப்பதால் அதிமுக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
