இந்தியாவில் 17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. வரும் 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்டவுள்ளன.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் ஏற்கனவே, நிறைவடைந்துவிட்டது. எனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் சந்திரசேகரராவ்  மீண்டும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிக்கும், பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான இடங்கள் கிடைக்காவிட்டால், அப்போது ஆட்சி அமைப்பதில் மூன்றாவது அணி முக்கிய பங்குவகிக்கும் என்பதுதான் சந்திரசேகரராவ் முயற்சிக்கு முக்கிய காரணம்.

காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்காத மாநில  கட்சிகள் சுமார் 120 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. அதனால் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலை ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட முடிவு செய்துள்ள சந்திர சேகர ராவ், திருவனந்தபுரத்தில் இன்று கேரள முதலமைச்சர்  பினராயி விஜயனை, சந்திரசேகர ராவ் சந்தித்தார்.

இது தொடர்ப்க  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உடன், சந்திரசேகரராவ் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், விரைவில் அவரை பெங்களூருவில் சந்திக்க உள்ளதாகவும்  தெரிகிறது.

இதனிடையே  திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, மே 13ஆம் தேதி சென்னையில் சந்திரசேகரராவ் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி ஆதரவளிக்கும் சூழ்நிலை இருந்தால், அப்போது மூன்றாவது அணியின், ஒருவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், மூன்றாவது அணி அமைக்கும், முயற்சி மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.