நேர்மையோடு மோத திராணியற்ற சக்திகள்.. கீழ்த்தரமான செயலில் ஈடுபடுகின்றனர்.. மநீம ஆவேசம்..!
வெறுப்பு அரசியலின் சூத்திரதாரிகள் மக்கள் நீதி மய்யம் என்கிற கதிரவனை உள்ளங்கைக்குள் மூடி விடலாம் என்கிற நினைப்பில் தரம் தாழ்ந்து செயல்பட நினைத்தால் நேர்மை எனும் நெருப்பில் அவர்கள் பொசுங்கிப் போவது உறுதியாகும்.

மக்கள் நீதி மய்யத்தின் நேர்மையோடு மோத திராணியற்ற சக்திகள் மனரீதியாக நெருக்கடி கொடுக்க முனைந்து அதிலும் தோல்வியை தழுவியதால் தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிப்பதாக நம்மவர் கமல்ஹாசன் அறிவித்ததில் இருந்தே அதனை பொறுக்க மாட்டாத மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில் தமிழ்நாட்டை அபகரிக்க நினைக்கும் வீணர்களின் பல்வேறு விதமான விஷக்கருத்துக்கள் பொதுவெளிகளிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு சென்று, அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணத்தில் மய்யத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்கி அதில் கட்சியின் அறிக்கை போன்று தவறான செய்தியை விஷமிகள் பதிவு செய்துள்ளதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வன்மையாகக் கண்டிக்கிறது.
நம்மவர் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நேர்மையோடு மோத திராணியற்ற சக்திகள் மனரீதியாக நெருக்கடி கொடுக்க முனைந்து அதிலும் தோல்வியை தழுவியதால் தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்கியுள்ளன. வெறுப்பு அரசியலின் சூத்திரதாரிகள் மக்கள் நீதி மய்யம் என்கிற கதிரவனை உள்ளங்கைக்குள் மூடி விடலாம் என்கிற நினைப்பில் தரம் தாழ்ந்து செயல்பட நினைத்தால் நேர்மை எனும் நெருப்பில் அவர்கள் பொசுங்கிப் போவது உறுதியாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் என பொன்னுசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.