ஒடுக்கப்படும் மனிதர்களை பார்க்கையில் உன் மனம் வலித்தால் நீயும் என் தோழனே! ஒடுக்குபவனை தட்டிக் கேட்டால் நீ என் தலைவனே!....என்று அசால்ட்டாக அந்த காலத்திலேயே பஞ்ச் தீ யை பற்ற வைத்தவர் புரட்சியாளர் சேகுவேரா.  இந்த ‘பொங்குதல்’ எல்லாம் அந்த காலத்திலேயே முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள்! இன்னமும் தன் சுயவாழ்வை பொது நலனுக்காக அடகு வைத்துவிட்டு போராடும் தோழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை ரத்தத்தினால் எழுதிக் காட்டியிருக்கிறது கேரளாவில் நான்கு மாவோயிஸ்ட்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ள விவகாரம். இது பற்றி பேசும் விமர்சகர்கள்...

”கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகம் இருந்தன. ’கேரள வனங்களில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்கள் கார்ப்பரேட் மனிதர்களால் அபகரிக்கப்படுகிறது. அதற்கு அரசாங்கமும் துணை போகிறது. அந்த நிலங்களை மீட்டு, மண்ணின் மக்களிடம் கொடுப்பதே எங்கள் கடமை’ என்று மாவோயிஸ்ட்கள் தங்களின் போராட்டத்துக்கான காரணங்களை சொன்னார்கள். அந்த ஆட்சியின் போது வனத்துறை, போலீஸ் மீது மாவோக்கள் தாக்குதல் நடத்தியதும், பதிலுக்கு போலீஸாரால் மாவோக்கள் கொல்லப்பட்டதும் நடந்தது. 

ஆனால் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த பின், மாவோயிஸ்ட்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி, ‘கார்ப்பரேட்களின் ஆட்டத்தை நாங்கள் ஒடுக்குகிறோம். நீங்கள் அமைதியாக இருங்கள். பழைய ஸ்டைலில் செயல்பட்டு, சட்ட ஒழுங்குக்கு சவால் விடவேண்டாம்.’ என்று அறிவுரை தரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் அடித்தளமே மாவோயிஸம்தான் என்பதால் மாவோயிஸ்ட்களும் இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து, தங்களின் அதிரடி செயல்பாடுகளை நிறுத்தினர். இந்த சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு அப்படியொன்றும் முடக்கப்படவில்லை. 

எப்படி காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் கெத்தாக வலம் வந்தார்களோ அதேபோல்தான் இப்பவும் வலம் வருகிறார்கள். காசர்கோடு, திருவனந்தபுரம்  பகுதிகளில் அதிகப்படியான பூர்வீக மக்களின் நிலங்கள் கார்ப்பரேட்களின் கைகளுக்குள் சென்றிருக்கின்றன. இந்த விவகாரத்தை அரசுக்கு பல முறை அமைதியாக சுட்டிக்காட்டியிருக்கின்றனர் மாவோயிஸ்ட்கள். ஆனால் எந்த நடவடிக்கையுமில்லை. அதனால் சமீபத்தில் ’காங்கிரஸுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமில்லை. இதை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வோம்.’ அப்படின்னு அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்கள் முழங்கியிருக்காங்க. இதை முதல்வர் பினராயி விஜயனின் கவனம் வரை கியூ பிராஞ்ச் போலீஸார் கொண்டு போயிருக்காங்க. 

அதன் பிறகு ஹைலெவல ஆலோசனை கூட்டம் தலைமை  செயலகத்தில் நடந்திருக்குது. அப்போது ‘இவர்களை இப்படியே அனுமதித்தால் மாநிலத்தின் சட்ட ஒழுங்குக்கு பிரச்னையாகிடும். ஒடுக்குறதுதான் நல்லது.’ என்று முதல்வர் மற்றும் முக்கிய கேபினெட் அமைச்சர்களிடம் கியூ பிராஞ்ச் போலீஸ் வலியுறுத்தி இருக்கிறது. விளைவு, கேரளாவில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை ஒடுக்க உருவாக்கப்பட்ட தண்டர்போல்ட் போலீஸுக்கு சிக்னல் தரப்பட, அவர்கள் சரசரவென களமிறங்கி, அமைதியாக வனப்பகுதிகளில் முகாமிட்டு வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த மாவோயிஸ்ட்கள் நாலு பேரை டப்பு டுப்புன்னு சுட்டுத் தள்ளிக் கொன்னுட்டாங்க. மிகப்பெரிய மனித உரிமை மீறல் இது! மனித உயிர்களை காலில் போட்டு நசுக்கியிருக்குது அரசாங்கம். இதற்கான பதிலடியை மாவோக்கள் தராமல் அடங்க மாட்டாங்க.” என்கிறார்கள். 
மை காட்!