கர்நாடகா மாநிலத்துக்குள், குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத்தவர்கள் நுழைய அனுமதி இல்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டை சேர்ந்த பயணிகள் கர்நாடகாவுக்குள் மே.31ம் தேதி வரை நுழைவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒப்புதலுடன் மட்டுமே இனி பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 3 மாநிலங்களாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழகம் உள்ளது.
 
கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,231ஆக அதிகரித்துள்ளது. எனினும், இன்று பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா கூறும்போது, சிவப்பு மண்டலம் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர்த்து பிற பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்துகளில் 30 பயணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட கால்டாக்சிகள் நாளை முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

தொடர்ந்து, பேசிய துணை முதல்வர் அஸ்வாத் நாராயன் கூறும்போது, கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அன்று அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாளை முதல் பூங்காக்கள் திறக்கப்படும் என்று கூறிய அவர், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நெறிமுறைகளை மாநில அரசு பின்பற்றும் என்று அவர் கூறினார்.