Asianet News TamilAsianet News Tamil

வைகையில் மிதப்பது தெர்மகோல் அல்ல... தமிழனின் தன்மானம்!!

thermacol floating in vaigai river
thermacol floating-in-vaigai-river
Author
First Published Apr 23, 2017, 11:40 AM IST


பசுமை புரட்சி செய்த சி.சுப்பிரமணியம், கணிதத்தில் புரட்சி செய்த இராமானுஜன், அறிவியலில் புரட்சி செய்த அப்துல்கலாம்...என்று ’கண்டுபிடிப்பில்’ புரட்சி செய்த தமிழர்கள் ஏராளம்.

ஆனால் அவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, சர்வதேச ஆராய்ச்சியாளர்களை மல்லாக்கப்படுத்து மதுரையை கவனிக்க வைத்திருக்கிறது செல்லூர் ராஜூவின் ‘தெர்மகோல்’ புரட்சி. 

அமைச்சர் தலைமையில் தமிழக அதிகாரிகள் குழு நடத்திய இந்த கூத்து பற்றி சில வட இந்திய மீடியாக்கள் கூட கழுவிக் கழுவி ஊத்துகின்றன. விமர்சனங்களுக்கு பின் அமைச்சரை காப்பாற்றும் காரியங்கள் அரங்கேறி வருகின்றன.

thermacol floating-in-vaigai-river

அய்யா சாமி! தெர்மக்கோலை மிதக்கவிட்டால் அணை நீர் ஆவியாவது தடுக்கப்படும் என்பதை அமைச்சரொன்றும் கண்டுபிடிக்கவில்லைதான்.

ஆனால் பரிசோதனை அடிப்படையில் நிகழ்த்தப்படும் இந்த காரியத்துக்கு, ஏதோ பாகிஸ்தான் மீது படையெடுக்க பாரத ராணுவம் கிளம்பியதுபோல் இத்தனை கார்களில் சென்று சீன் போடவேண்டிய அவசியம் ஏன்? அரசின் எல்லா துறைகளிலும் பரிசோதனை முயற்சிகள் இப்படித்தான் படாடோபமாக பண்ணப்படுகிறதா?! அரிய கண்டுபிடிப்பு பொருளை தண்ணீரில் மிதக்கவிட்ட பின் அமைச்சர் நகர்வதற்குள் பல தெர்மகோல் அட்டைகள் கரையேறி வெயில்காய ஆரம்பித்துவிட்டன. 

சிரிக்க வேண்டிய விஷயமில்லை இது! சிந்திக்கவேண்டிய விவகாரம்.

பங்காளி சண்டையால் அரசு இயந்திரம் முடங்கிக் கிடப்பதை மறைத்து, தானெல்லாம் மக்கள் திட்டங்களை களமிறங்கி செய்கிறேன் என்று காட்டுவதற்காக செல்லூர் ராஜூ நடத்திய சுயநல கூத்து இது என்று அரசியல் விமர்சகர்கள் தாளிக்கிறார்கள்.

thermacol floating-in-vaigai-river

‘இதற்காக 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று பெருமை வேறு பேசுகிறார் அமைச்சர். இந்த சீனுக்காக உங்கள் படை பறந்து வந்த காருக்கான எரிபொருளுக்கும், வரும்போதும் திரும்பும் போதும் டீ கடை, ஹோட்டல் என்று அரசு ஊழியர்கள் வயிறு நிறைய தீட்டி எடுத்ததற்கும் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது?

செல்லூர் ராஜு கொடுத்தாரா அல்லது இதை தடுக்க தவறிய கலெக்டர் வீரராகவராவ் தந்தாரா? மக்களின் வரிப்பணம்தானே! யார் பணத்தை யார் வாரியிறைப்பது? இதையெல்லாம் தட்டிக் கேட்க மக்களுக்கும் திராணியில்லை பாவம். அதனால்தான் இணையவெளியில் நகைப்புப் பொருளாகிக் கிடக்கிறது இந்த அவலம். 

வைகையில் மிதப்பது தெர்மகோல் அல்ல. தமிழனின் தன்மானம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios