தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருப்பவர்களில் ஆறு பேரின் பதவி காலம் நிறைவடைவதை அடுத்து அந்த இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து திமுகவிருக்கும் அதிமுகவிற்கு தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதையடுத்து திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதிமுகவிடம் தேமுதிக ஒரு இடம் கேட்டு முரண்டு பிடித்து வந்த நிலையில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. இந்தநிலையில் அதிமுக சார்பாக மாநிலங்களவைக்கு தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோரும் மற்றொரு இடத்தில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில் பாஜக மேலிடத்தின் நிர்பந்தம் காரணமாகவே வாசனுக்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தற்போது செய்திகள் உலாவுகின்றன.

அதைமறுத்திருக்கும் ஜி.கே.வாசன் பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் அவர்கள் தயவால் நான் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டேன் என்பது சரியல்ல என்றார். அதிமுக தங்கள் விருப்பத்தின் படியே வேட்பாளர்களை தேர்வு செய்ததாகவும் கூறினார். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று கூறிய வாசன் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றில் பாதிப்பு வந்தால் சிறுபான்மை மக்களை காப்பாற்றும் முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் என்றும் தெரிவித்தார்.