கொரோனா' பரவல் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், மக்கள் கூடியது தான் காரணம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனா' பரவல் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், மக்கள் கூடியது தான் காரணம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

எத்தனையோ எச்சரிக்கை விடுத்தும் பொது மக்களும், அரசியல்வாதிகளும் காதுகொடுத்து கேட்டபாடில்லை. தேர்தல் பிரசாரத்தை பாதிக்கும் வகையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் கமிஷனும் ஒதுங்கி நின்றதால், அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனினும், தேர்தல் முடிந்த உடனே கட்டுப்பாடுகள் விதித்து அமல்படுத்த அரசின் அனைத்து துறைகளும், 'அலெர்ட்' செய்யப்பட்டுள்ளன. அப்படியும் எண்ணிக்கை குறையவில்லை என்றால், முழு அடைப்பு வரையிலும் போகலாம் என்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள்.

இதற்கிடையில், வேட்பாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள் பலருக்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டு, அவர்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்யப்படும். ஓவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்; சமூக இடைவெளியில் வரிசையில் நின்றுதான் ஓட்டளிக்க வேண்டும் என, கமிஷன் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான பல காரணங்களால், கடந்த சட்டசபைத் தேர்தலை காட்டிலும் இந்த முறை ஓட்டுப்பதிவு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

50 வயதைக் கடந்தவர்கள் கூட, கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும், வெயில் காரணமாகவும் ஓட்டளிக்க வர மாட்டார்கள் என்ற அச்சம், கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

'ஐம்பது வயதை கடந்த வாக்காளர்கள், ஒன்றரை கோடி வரை இருப்பர். அவர்களில் பெரும்பாலானோர், தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வந்தவர்கள். அதனால், ஓட்டுப்பதிவு சதவிகிதம் குறையும்போது, அது தி.மு.க.,வுக்குத்தான் பாதிப்பாக அமையும்' என, அக்கட்சி கணக்கிட்டு பதற்றப்படுகிறது. இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என புரியாமல் தவித்த, தி.மு.க., கடைசி நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை, கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையோடு, வீட்டில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் செல்லும் வேலையை செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறது. தேர்தல் விதிகளின்படி இது தவறுதான் என்றாலும், அசாதாரணமான பிரச்னைக்கு அசாதாரணமான முடிவு தேவைப்படுவதாக அறிவாலயம் கூறுகிறது.