தேனி தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜெயலலிதா தங்கிய வீட்டில் தங்கி பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேனியில் அம்மா பங்களா என அழைக்கப்படும் வீட்டில் தங்கியுள்ளார். என்.ஆர்.டி.நகரில் உள்ள சிங்கப்பூர் பங்களா அது. இந்த வீட்டில் 2002-ல் ஜெயலலிதா தங்கியிருந்தார். பின்னர் 2006- சட்டமன்றத் தேர்தலின் போதும் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா சிங்கப்பூர் பங்களாவில் ஓய்வெடுத்தார்.

ஜெயலலிதா தங்கியிருந்ததற்கு பின்னர் சிங்கப்பூர் பங்களாவை அம்மா பங்களா என தேனி நகர மக்கள் அழைக்கத் தொடங்கினர். இந்த பங்களாவிற்கு சொந்தக்காரரான பாரதி சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளில் தொழில் செய்து வருபவர். மிளகு, ஏலக்காய் என வாசனை பொருட்கள் ஏற்றுமதி தொழில் செய்து வரும் பாரதி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாடகையின்றி வீட்டை தங்குவதற்கு அளித்துள்ளார்.

எல்.இ.டி.தொலைக்காட்சி, ஏ.சி., பிரிட்ஜ், சோபா செட், வாஷிங்மெஷின் என அத்தனை பொருட்களும் வீட்டில் எப்போதும் இருக்கிறது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த இளங்கோவன் அந்த வீட்டில் குடியேறி விட்டார். அம்மாவிற்கும், அதிமுகவிற்கும் சென்டிமெண்டாக ராசியான வீடு என்று இருந்த பங்களா பறிபோய்விட்டதே என அதிமுக தொண்டர்கள் கலைப்படுகிறார்கள். ஜெயலலிதாவிற்காக கம்பீரமாக காத்து கொண்டிருந்த பிரசார வாகனம் இன்று காங்கிரஸ் கொடியுடன் நின்று கொண்டிருக்கிறது ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்காக...