ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியில், தேனியில் ஒரு தற்கொலை வழக்கில் பன்னீரின் தம்பி ஓ.ராஜாவின் தலை வெகுவாக உருட்டப்பட்டது. இதற்காக ஜெயலலிதாவிடம் மிக மோசமாக வாங்கிக் கட்டினார் பன்னீர். 

இப்போது ஜெயலலிதா இல்லாமல், பன்னீரே அக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிலையிலும் ஓ.ராஜாவால் பன்னீருக்கு பெரும் பிரச்னையாகிக் கொண்டுதான் இருக்கிறது. லேட்டஸ்டாக மணல் கடத்தல் புகாரில் ஓ.ராஜா சிக்கிட, ஓவராய் மனம் நொந்து இருக்கிறார் பன்னீர். 
விவகாரம் இதுதான்...

தேனி மாவட்டம் பெரிய குளம் மற்றும் போடி பகுதியில் மணல் மற்றும் கரம்பை மண் ஆகிய கனிம வளங்களை ஆட்களை வைத்து  ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கடத்துவதாகவும், பிற பகுதிகளில் மணல் கடத்துபவர்கள் ராஜாவுக்கு பணம் கட்டிவிட்டு அந்த கிரிமினல் வேலைகளை செய்கிறார்கள்! என்றும் தேனி கலெக்டர் பல்லவிவியிடம் கடந்த 1-ம் தேதியன்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் நகரச் செயலாளர் துரை ஆகியோர் புகார் கொடுத்தனர். 

இது பற்றி ராஜாவிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லையாம். ஆனால் இதைத்தொடர்ந்து, புகார்தாரர்கள் இருவருக்கும் பல தரப்புகளில் இருந்தும் மிரட்டல் போன்கால்கள் வருகின்றனவாம். ”பெரியகுளம் டி.எஸ்.பி. ஆறுமுகம் என்னை அழைச்சு ‘ராஜா மேலேயும், போலீஸ் மேலேயும் புகார் கொடுக்குறீயா? எங்களை பகைச்சுக்கிட்டு நீ என்ன பண்ணிடுவ? துப்பாக்கிய எடுத்து இங்கேயே உன்னை சுட்டுத்தள்ளிடுவோம்.’ம்ன்னு மிரட்டினார். எந்த புகாரும் இல்லாமல் எங்களை நாலு மணி நேரம் சட்டப்பூர்வமற்ற முறையில் கஸ்டடியில் வெச்சு மிரட்டினார்.

பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜவோ ‘லாரியில் அடிபட்டு செத்து கிடப்பான்’ன்னு என்னோட நண்பர்களிடம் என்னை பற்றி சொல்லி மிரட்டல்விடுறார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வரின் தம்பியே இப்படி அக்கிரமங்களில் ஈடுபடலாமா?” என்று கொதித்திருக்கிறார்.

மாவட்ட செயலாளர் முருகனோ “பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் எடுபிடிகளான குண்டாஸ் சுரேஷ், நாய் சேகர் ஆகியோரின் மேற்பார்வையில் ராஜா மணல் கடத்துவதை பற்றி கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். தப்பு செய்றவங்களை தட்டிக் கேட்காம, புகார் கொடுத்த எங்களை மிரட்டுது போலீஸ்.” என்கிறார். 

தேனி போலீஸோ இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. பிரச்னையின் மைய புள்ளியான பன்னீரின் தம்பி ராராவோ ஆவின் சேர்மனாகும் முயற்சியில் இருக்கிறதால் இது பற்றியெல்லாம் விளக்கம் கொடுக்க தயாரே இல்லையாம். 

ஆனால் தேனி மாவட்டத்தின் நடுநிலை அ.தி.மு.க.வினர்தான் புலம்பிக் கிடக்கிறார்கள். “ஏற்கனவே கட்சி பெயரு கேடு கெட்டு கிடக்குது இங்கே. இதுல ராஜாவோட ஆட்டத்தால் பன்னீருக்கும் சேர்ந்து தலைவலி, கட்சிக்கும் பெரிய அடி. 

பன்னீர்செல்வம் துவக்க காலத்துல தன் தம்பி ராஜாவை வளர்த்துத்தான் விட்டாரு. ஆனால் சமீப காலமா பன்னீரின் மகன் ரவீந்திரநாத்  ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்ச பிறகு, ராஜாவை ஓரங்கட்டிட்டார் பன்னீர். பல முறை முறையிட்டும் அண்ணன் அசைஞ்சு தராததால தான் தோண்றித்தனமா பல வேலைகளை செய்கிறார். ‘தம்பி உங்களாலே அண்ணன் பேர் கெடுது’ன்னு சொன்னால், ‘அதுக்கு நான் என்ன பண்ண? நானும் பொழைக்க வேண்டாமா?’ன்னு கேட்கிறார். எங்கே போய் முடியுமோ இந்த பிரச்னை. அண்ணன் தம்பிக்குள்ளே இருக்கிற ஈகோவால் கட்சிதான் அழியுது! என்கிறார்கள்.  துணை முதல்வரே, புலம்பல் கேட்குதா?