வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ. நீண்ட காலமாகவே பொறுப்பில் இருப்பவர். 13 வருடங்கள் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். தமாகா ஜி.கே.வாசனுக்கு நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர். இருந்தாலும் அவர் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் செல்லாமல், காங்கிரஸிலேயே உறுதியாக ஈடுபாட்டுடன் நின்றவர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும் ஒருமுறை பதவி வகித்தவர்.

ஆனால், திருநாவுக்கரசு கட்சியின் மாநில தலைவராக இருந்போது, கட்சி விதிகளை காரணம் காட்டி மாவட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். கூடிய சீக்கிரம் மாநில பொறுப்பு தரப்படும் என்று உறுதி அப்போதே மனோவிடம் வழங்கப்பட்டது. அதனால் எப்படியும் தமக்கு மாநில பொருளாளர் பதவியே வரும் என்று எதிர்பார்த்து காத்து கிடந்தவருக்கு எதுவுமே தரப்படவில்லை. எனினும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இந்த சமயத்தில்தான், திருநாவுக்கரசு மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக கேஎஸ் அழகிரி நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் நியமனத்துக்கு பிறகும் மனோவுக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் மனோவுக்கு தரப்படவே இல்லை. இதனால், அவர் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் மரியாதையும், முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதைவிட, பேசாமல் காங்கிரசிலிருந்து விலகிடலாம் என்று முடிவு செய்துள்ளாராம். விரைவில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் தலைமைக்கு அனுப்ப போகிறாராம். ஆனால், காங்கிரஸில் இருந்து விலகினால் எந்த கட்சியில் இணைவது என்ற குழப்பத்திலும் மனோ உள்ளார். திமுகவில் சேரலாமா? பாமகவில் சேராமா என்று குழப்பம் நீடித்து வருகிறது. 

பெரும்பாலும் திமுகவிலேயே சேர முடிவெடுப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இது சம்பந்தமான பேச்சு சுதர்சனம் மூலம் அறிவாலயத்தில் நடந்து வருகிறது. இதனிடையே பாமகவில் இணைந்தால், எதிர்கால அரசியலுக்கு நல்லது என்று மனோவுக்கு ஒருசிலர் எடுத்துக் கூறி வருகின்றனர்.