தஞ்சாவூர்

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிரிந்து, சிதைந்துவிடாமல் இருக்க அரணாக இருந்தவர் ம.நடராஜன் என்றும், அவர் வெளியே தெரியாத கதாநாயகன் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் சமாதியில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் அவர், ம.நடராஜன் சகோதரர் சுவாமிநாதனுக்கு ஆறுதல் சொன்னபோது இருவரும் கண்ணீர் சிந்தினர். 

இதனையடுத்து வைகோ செய்தியாளர்களிடம், "தமிழர்களை தரணிக்கு அடையாளம் காண்பித்த படை வீரர்களின் துகிலகங்களை ஈழத்தில் ராஜபக்சே அரசு இடித்து தள்ளியது. விடுதலைப் புலிகளின் தளபதிகளின் கல்லறைகள் தூள், தூளாக்கப்பட்டன. 

ஈழப்போரின் நினைவுகளை வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் நினைவு முற்றம் அமைக்க வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தீர்மானித்தபோது அவருக்கு தோள் கொடுத்தவர் ம.நடராஜன்.

ஆயிரம் ஆண்டுகளை கடந்து ராஜராஜசோழனின் மெய்கீர்த்திகளை எப்படி பெரியகோவில் பறைசாற்றி கொண்டு இருக்கிறதோ அதேபோல ஈழத் தமிழர்களின் அழிவுகளை மக்கள் மனதில் நினைவுபடுத்தி கொண்டே இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் இருக்கும். 

தமிழ் இன உணர்வு, மொழி உணர்வு உள்ள ம.நடராஜன் தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்தியது கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர் என எந்த பதவியிலும், அதிகாரத்திலும் இல்லாத நடராஜனுக்கு பல்வேறு மாநிலங்களில் தலைவர்களின் பழக்கம் கிடைத்தது ஆச்சர்யம் அளிக்கிறது. தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார். 

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிரிந்து, சிதைந்துவிடாமல் இருக்க அரணாக இருந்தவர். வெளியே தெரியாத கதாநாயகனாக இருந்தார். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் பழிங்கு கற்களால் ஆன கல்லறை அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். 

தனி ஈழம் நிச்சயம் அமையும். தனி ஈழம் அமைந்த பின்னர் தலைவர்கள் எல்லாம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தும்போது ம.நடராஜன் கல்லறைக்கு வந்து மலர் தூவி செல்வார்கள்" என்று அவர் கூறினார்.