கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வலியுறுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 5 ஆவது நாளாக அவரிடம் கிடுக்கிப் பிடி விசாரணை நடைபெறு வருகிறது. இன்றுடன் அவரது போலீஸ் காவல் முடிவடைவதால் அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மீண்டும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.

நிர்மலா தேவி விவகாரத்தில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாவதால், அதில் தொடர்புடையவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். எந்த நேரத்தில் தங்களை விசாரணைக்கு அழைப்பார்களோ என்ற பீதியில் இருந்து வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க, நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது தற்போது வெளியாகி உள்ளது. அருப்புக்கோட்டை அரண்கள் என்ற பேஸ்புக் பக்கத்தில்தான் நிர்மலா தேவியின் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை அரண்கள் பேஸ்புக் பக்கத்தின் அட்மினாக இருப்பவர் வழக்கறிஞர் தங்கபாண்டியன்.

நிர்மலா தேவி ஆடியோ வெளியிடப்பட்டது குறித்து பேசிய அவர், கடந்த மார்ச் மாதத்தில், சம்பந்தப்பட்ட மாணவிகள் சிலர் என்னை சந்தித்தனர். நிர்மலா தேவி, மாணவிகளுடன் பேசும் ஆடியோவை என்னிடம் அவர்கள் கொடுத்தனர். அந்த ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், இந்த விஷயத்தை கவனமாக கையாள முடிவு செய்தேன். இது குறித்து பின்புலன்களை விசாரிப்பதற்குள், நிர்மலா தேவி குறித்த செய்திகள் அரசல் புரசலாக வெளியாகின. இந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்தது. மேலும், ஆடியோ விவகாரத்தை மூடி மறைக்கவும் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்டிபல், கல்லூரியில் செயல்படும் கமிட்டியில் மார்ச் மாதத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அந்த புகார் கிடப்பில்
போடப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த கமிட்டியில் நிர்மலா தேவியும் ஒரு உறுப்பினர். இந்த பிரச்சனை குறித்து நிர்மலா தேவியிடம் விசாரித்தவர்களை, நீ யோக்கியமா.... உன் கதையை நான் சொல்லட்டுடுமா என்று நிர்மலா தேவி கேட்டுள்ளார். அவரது கேள்விகளுக்க பதில் சொல்ல முடியாதவர்கள் இந்த புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. நடவடிக்கை ஏதும் இல்லாததால், பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பினர் பல இடங்களில் நியாயம் கேட்டு அலைந்துள்ளனர். அதன் பின்னரே அவர்கள் என்னை சந்தித்தனர்.

இந்த நேரத்தில்தான், நிர்மலா தேவியின் ஆடியோவை எனது பேஸ்புக் பக்கத்தில், மாணவிகளின் பெயர்களை அழித்து, உரையாடலை மட்டும் ஏப்ரல் 13 ஆம் தேதி பதிவு செய்தேன். அது மற்ற சமூக வலைத்தளத்தில் வெகுவாக பகிரப்பட்டது. மீடியாக்களும் நிர்மலா தேவியின் செய்தியைக் கையில் எடுத்தது. இதன் பிறகு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. நிர்மலா தேவி மீது நடவடிக்கை பாய்ந்தது. கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதன் பிறகுதான், கல்லூரி செயலாளர் ராமசாமி, அருப்புக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். 

அதுவரை போலீசார், மாணவிகளின் புகார்களை தட்டிக் கழித்து வந்தனர். புகாரின்பேரில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிபிசிஐடி போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட பிறகு விசாரணையின் கோணம் மாறியிருக்கிறது. நிர்மலா தேவிக்கு எதிராக வாய் திறக்காமலிருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டுள்ளது. என்று வழக்கறிஞர் தங்கபாண்டியன் கூறியுள்ளார்.