அதிமுகவில் நடைபெறும் சண்டைகளைப் பார்த்து கட்சிக்காரர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர் என்றும், எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்காது என்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் இருந்து ஒதுங்கியே இருந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கடந்த மாதம் 26 ஆம் தேதி, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

நாயினார் நாகேந்திரன், வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, திராவிட அரசியலை வெறுக்கும் பாஜகவில் சேர்ந்தது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தலைவரும், அம்மாவும் இல்லாத கட்சியில் இருக்க பிடிக்கவில்லை எனவே பாஜகவில் சேர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

அதிமுகவில் உங்களுக்கு எதிராக யாராவது செயல்பட்டார்களா என்றதற்கு, யாரைப் பற்றியும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. என்னை வளர்த்த கட்சி. அம்மாவின் கட்சியில் யார் யாரோ எப்படி எப்படியோ நடந்து கொண்டாலும். நான் குறை சொல்லி அசிங்கப்படுத்த விரும்பவில்லை என்றார்

அதிமுகவில் நடைபெறும் சண்டைகளைப் பார்த்து கட்சிக்காரர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற இவர்கள் நடத்தும் பேரங்கள், தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளன என்று கூறிய அவர், எடப்பாடி அரசு நீடிக்காது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.