சபாநாயகர் தனபால் செருப்பு போட்டுக்கொண்டே பூமி பூஜையின் போது சாமி கும்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம்பாளையத்தில், நபார்டு திட்டத்தின் கீழ், 66.39 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தார் சாலை அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் துவங்கியது. பூமி பூஜையில் கலந்துகொள்ள சட்டப்பேரவை தலைவரும், அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

அப்போது செருப்பு போட்டபடியே சபாநாயகர் தனபால் சாமி கும்பிட்டார். இது அங்கிருந்த அதிமுக தொண்டர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின்போது அங்கிருந்தவர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் பொறுப்புள்ள சபாநாயகர் இப்படி செருப்பு போட்டபடி சாமியை வணங்குவது இந்துக்களை அவமதிப்பதை போல் உள்ளது என சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். 

ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட இன மக்களில் ஒருவனாக நான் உயர்ந்துள்ளேன். என் சமூகம் வளரக் கூடாது என நினைத்து திமுக-வினர் செயல்பட்டு வருவதாக திமுக மீது குற்றம் சாட்டினார். சபாநாயகராக இருப்பவர் இப்படி ஒருதலை சார்பாக தனது சாதியை இழுத்து வைத்து பேசலாமா? எனவும் முன்பு சர்ச்சை எழுந்தது. 

கடவுள் நம்பிக்கை அதிக நாட்டமுடைய அதிமுகவினர் தலைமை செயலகத்திலேயே யாகம் நடத்தி பக்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் தனபால் செருப்பு போட்டு கொண்டே சாமி கும்பிட்டது முரண்பாடுகளை வெளிப்படுத்தி இருக்கிறது.