அர.திரவிடம் எழுதிய ’திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’நூல்  வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. 


அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ’’ஆட்சிக்கு வந்தோம், சட்டங்கள் இயற்றினோம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டங்கள் செய்தோம். ஆனால், அவர்களால் கோயில் கருவறைக்குள் நுழைய முடிந்ததா? யார் வேண்டுமானாலும் மதம் மாறலாம். ஆனால் யாராவது சாதி மாற முடியுமா? நாளை நான் பார்ப்பனராக மாறிவிட்டேன் என்று சொல்ல முடியுமா? இதே கேள்வியைத்தான் டி.எம்.நாயர் கேட்டார். அந்தக் கேள்விக் கான விடையை தேடித்தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

1927இல் காந்தியடிகள் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கிறார். அப்போது கொங்கு மண்டலத்தில் சங்கராச்சாரி இருந்திருக்கிறார். அவரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றார் மகாத்மா காந்தியடிகள். அவர் வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்று மாட்டுத் தொழுவத்தில் வைத்து ஆசி வழங்கியிருக்கிறார் சங்கராச்சாரி. அப்போது சங்கராச்சாரிக்கு வயது 34. மகாத்மாவின் வயது 58. மகாத்மாவின் நிலைமையே அப்படியென்றால் நம்மைப் போன்ற சாதாரண ஆத்மாக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

1927இல் நடந்ததை இப்போது ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கலாம். இப்போதும் அதே நிலைமைதான். எடப்பாடி பழனிசாமி, சங்கராச்சாரியைச் சந்தித்தால் எங்கே உட்கார வைக்கப்படுவார், சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தால் எங்கே உட்கார வைக்கப்படுவார்? அன்றைய நிலைதான் இன்றும் தொடர்கிறது என்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா?’’ என்று அவர் தெரிவித்தார்.