அ.தி.மு.க. அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்காக அரசும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் காத்திருக்கின்றனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வெற்றிவேல். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேலின் எம்.எல்.ஏ. அலுவலகம், வியாசர்பாடி சர்மா நகரில் உள்ளது.

இந்த அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனால் அந்த அலுவலகம் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பூட்டியே கிடக்கிறது. இந்தநிலையில் எம்.எல்.ஏ அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக எம்.கே.பி நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்குச் சென்று விசாரித்தனர். 

விசாரணையில் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் மாடி வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அலுவலகத்திலிருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருள்களை சூறையாடினர். மேலும், அலுவலகத்தில் இருந்த மேஜையை இழுத்துப்போட்டு அதில் ஆற அமர்ந்து சரக்கு அடித்து விட்டு கும்மாளமிட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த மின்விசிறிகள், 2 கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.  கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.