The prime minister function of the state of spiritual struggle to find the time for farmers

தமிழக விவசாயிகளை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை எனவும், ஆன்மிக விழாவிற்கு தமிழகம் வந்த பிரதமருக்கு விவசாயிகளின் போராட்டம் குறித்து கண்டுகொள்ள நேரமில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர். ஆனால் மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை.

37 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள், சினிமா பிரமுகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு அவமதிப்பதாக தெரிவித்தார்.

தமிழக விவசாயிகளை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை எனவும், ஆன்மிக விழாவிற்கு தமிழகம் வந்த பிரதமருக்கு விவசாயிகளின் போராட்டம் குறித்து கண்டுகொள்ள நேரமில்லை எனவும் சாடினார்.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அறிவிப்பதில் தான் மோடி கவனமாக இருக்கிறார் எனவும் அவர் கூறினார்.