the politics is ex chief minister jayalaitha murder that is politics by saravanan mla in ops team

ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், அரசியல்னா அப்டிதான் இருக்கும் எனவும் ஒ.பி.எஸ் அணியின் சரவணன் எம்.எல்.ஏ பேசிய வீடியோ ஒன்று தனியார் தொலைகாட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பல உச்சகட்ட குழப்பங்களும் மர்மங்களும் நீடித்து வருகின்றன. உடல் நலக்குறைவால் பாதிப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

72 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை சசிகலா தவிர எவரும் பார்ப்பதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் இக்கட்டான காலங்களில் 3 முறை முதலமைச்சராக பதவியேற்ற பன்னீர்செல்வத்தை கூட பார்க்க அனுமதிக்கவில்லை.

அதிமுக தொண்டனில் தொடங்கி ஆளுநர் வரை எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அப்போலோ மருத்துவமனை வாசல் வரை வந்து திரும்பி சென்றனர்.

இதனால் மக்களுக்கும் மீடியாக்களுக்கும் பலத்த கேள்விகள் எழுந்தன. இதைதொடர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி மாலையே ஜெயலலிதா இறந்து விட்டதாக தொலைகாட்சிகள் செய்திகளை கசியவிட்டன.

ஆத்திரமடைந்த தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனையின் மீது கல்வீசி தாக்குதல் நடத்த முயற்சித்தபோது ஜெயலலிதா மரணிக்கவில்லை என அறிக்கை வெளியிட்டனர்.

இதைதொடர்ந்து இரவு 11 மணிக்கு சசிகலா ஒ.பி.எஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தை ஏற்பாடு செய்து பன்னீர் செல்வத்தை முதல்வராக்கி பின்னர், ஜெயலலிதா மரணித்ததாக அறிவித்தனர்.

பின்னர், சில நாட்களுக்கு பிறகு ஒ.பி.எஸ்சின் முதலமைச்சர் பதவி பிடுங்க பட்டது. சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அமைச்சர்கள் முதல் இப்போது ஒ.பி.எஸ் தரப்பில் இருக்கும் மதுசூதனன் வரை சசிகலாவிடம் கையேந்தி நின்றனர்.

சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் ஒ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து எழுந்து போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார்.

அவருக்கு ஆதரவாக மதுசூதனன், மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டோர் துணை வந்தனர்.

இந்நிலையில், சசிகலா தரப்பினர் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தி அனைத்து எம்.எல்.ஏக்களையும் கூவத்தூர் அழைத்து சென்றனர். அதில் சிலர் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதில் முதல் ஆளாக வெளியே வந்தவர் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சரவணன். இவர் கூவத்தூரில் இருந்து தப்பித்து வந்ததாக அப்போது பேட்டி அளித்தார்.

பன்னீர் தரப்பில் இருந்து ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என அழுத்தி கூறப்பட்டதால் மக்களின் கவனம் பன்னீர் பக்கம் திரும்பியது.

இதைதொடர்ந்து பாஜக பின்னணியில் இயங்கி வருவதாக விமர்சித்த எதிர்கட்சிகளின் கூற்றை ஒ.பி.எஸ் மறுத்து வந்தார்.

இந்நிலையில், தற்போது ஒ.பி.எஸ் அணியின் எம்.எல்.ஏ சரவணன் பேசிய ரகசிய வீடியோ ஒன்று ஆங்கில தனியார் தொலைகாட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், அரசியல்னா அப்டிதான் இருக்கும் எனவும் சரவணன் கூறியுள்ளார்.

மேலும் எனக்கு 500 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது எனவும் ஒ.பி.எஸ் அணி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒன்று தமிழ்நாட்டில் நான் அமைச்சராக இருப்பேன், இல்லையென்றால் மத்தியில் அமைச்சராக இருப்பேன் என அந்த வீடியோவில் சரவணன் எம்.எல்.ஏ பேசியுள்ளார்.