இந்த மண்ணின் மக்களுக்கு வீடு இல்ல.. சென்னைக்கு அழகு தேவையா.? ஸ்டாலினுடன் மோதும் சீமான்.
அத்தகைய மிக நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றாது மக்களை அடித்து விரட்டுவதென்பது சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும். அடிப்படை உரிமையைக்கூட நிறைவேற்ற முடியாத அரசிற்கு வீணான ஆடம்பர அழகுபடுத்தும் திட்டமெதற்கு? அதற்குப் பல்லாயிரம் கோடி செலவு எதற்கு?
எழும்பூரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மண்ணின் மக்களுக்கு உடனடியாகச் சென்னை மாநகருக்குள்ளேயே வீடுகள் ஒதுக்கித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகளில் கடந்த மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மண்ணின் மக்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், தலைநகரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஏழை, எளிய பூர்வகுடி மக்களை, அவர்களது சொந்த இடங்களிலிருந்து மாற்று இடம்கூட வழங்காமல் விரட்டியடிக்கப்படும் கொடுங்கோன்மைச் செயல்கள் தொடர்கதையாகிவிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அரும்பாக்கத்தில் வாழ்ந்துவந்த ஆதித்தமிழர் குடியிருப்புகளைத் திமுக அரசு வலுக்கட்டாயமாக அகற்றியது. மாநகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட மாற்றுக் குடியிருப்புகளை ஏற்க மறுத்து, அம்மக்கள் போராடியதையும் பொருட்படுத்தாது அவர்களது குடியிருப்புகளை இரவோடு இரவாக இடித்து, பூர்வகுடி மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது. பின்னர் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் போராடத் தொடங்கிய பிறகு அவசர அவசரமாகப் புளியந்தோப்பில் முறையான கட்டுமானம் இல்லாத பாதுகாப்பற்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது. தற்போது அதன் நீட்சியாக எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகே வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட இருப்பிடச்சான்றுகளுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மண்ணின் மக்களை மாற்று வசிப்பிடமேதும் வழங்காமல் காவல்துறை அடக்குமுறைகளை ஏவி வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியிருப்பது எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் திமுக அரசின் அலட்சிய மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
இதையும் படியுங்கள்: விண்ணை முட்டுது டீசல் விலை.. விலைவாசியை குறைக்க இதை செய்யுங்க.. முதல்வருக்கு ஓபிஎஸ் செம்ம ஐடியா.
எழும்பூர் பகுதி பூர்வகுடி மக்களுக்கு கே.பி.பார்க்கில் மாற்று வசிப்பிடங்கள் வழங்குவதாக முதலில் உறுதியளித்த தமிழக அரசு, தற்போது அம்மக்களின் அடையாள ஆவணங்களைக் காவல்துறை மூலம் பறித்துக்கொண்டு, அவர்களது உடைமைகளைக் கண்ணப்பர் திடலில் உள்ள காப்பத்திற்கு அப்புறப்படுத்திதோடு, தற்காலிகமாக அக்காப்பகத்தில் தங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஏற்கனவே அதே காப்பகத்தில் வீடுகள் ஒதுக்குவதாக உறுதியளித்து தங்கவைக்கப்பட்ட மக்கள், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வீடுகள் ஏதும் வழங்கப் பெறாமல் ஏமாற்றப்பட்டு வருவதாகக்கூறி, மக்கள் அக்காப்பகத்தில் தங்க மறுத்துவிட்டனர். எனவே, எழும்பூர் பூர்வகுடி மக்கள் தற்போது மாற்றுத்துணி கூட இல்லாமல் சாலையோரத்தில் வசிக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. நெருக்கடி மிகுந்த பகுதியிலிருந்து மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும்முன் அங்கு வசிக்கும் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும், மாநகரத்திற்குள்ளேயே பாதுகாப்பான மாற்று வசிப்பிடங்கள் வழங்க வேண்டும் என்ற கோருவது பூர்வகுடி மக்களின் அடிப்படை உரிமையாகும்.
இதையும் படியுங்கள்: எப்படியாவது மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜக துடிக்கிறது.. பயங்கரமாக எச்சரித்த தயாநிதி மாறன்.
அத்தகைய மிக நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றாது மக்களை அடித்து விரட்டுவதென்பது சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும். அடிப்படை உரிமையைக்கூட நிறைவேற்ற முடியாத அரசிற்கு வீணான ஆடம்பர அழகுபடுத்தும் திட்டமெதற்கு? அதற்குப் பல்லாயிரம் கோடி செலவு எதற்கு? ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் இருந்த குடியிருப்புகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வகுடி மக்களுக்கு, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் அருகாமையிலேயே நிரந்தர, பாதுகாப்பான வசிப்பிடங்களை உடனடியாக ஏற்படுத்திதர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாற்று வசிப்பிடங்கள் வழங்காமல் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், எதிர்காலத்தில் இனி ஒருபோதும் நிகழக் கூடாதென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதில் கூறப்பட்டுள்ளது.