அதிமுகவில் ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், இ.பி.எஸ் தரப்பிலும், ஓ.பி.எஸ் தரப்பிலும் பெரிய பஞ்சாயத்து ஓடி ஒரு வழியாக அமைதி நிலைக்கு திரும்பி இருக்கிறது. ஆனாலும், ஆங்காங்கே முதல்வர் வாழ்க கோஷத்தை இரு தரப்பினரும் மாறிமாறி முழங்கி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள் ‘வருங்கால முதலமைச்சரே’என வாழ்த்துக் கோஷம் எழுப்பி அதிமுகவில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஓரிரு நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே செங்குளத்தில் சாலை திட்டப்பணியை துவக்கி வைக்க வந்த அமைச்சர் உதயகுமார் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிக் கொண்டிருந்தார். 

அப்போது, அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர், ‘வருங்கால முதலமைச்சர் அண்ணன்’என கோஷம் போட ஆரம்பித்து விட்டார்கள். இதனைக் காதில் கேட்ட அமைச்சரோ, மெல்லிய புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அடுத்து என்ன நடந்ததோ தெரியவில்லை. மறுநாள் தேவர் ஜெயந்தி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், ‘வரவேற்பு போஸ்டர்களில் ஜெயலலிதா, முதல்வர், துணை முதல்வர் படங்களை பெரிதாக போடுங்கள். 

ஆர்வக்கோளாறில் எங்களில் யாரையாவது பெரிதாக போட்டு, ‘வருங்கால முதல்வரே’என்று கோஷங்களை போட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி விடாதீர்கள். தலைமைக்கு கட்டுப்பட்ட தொண்டன் நான். உங்கள் அன்பை இப்படிக் காட்டி விடாதீர்கள்’என்று உருக்கமான கோரிக்கை வைத்திருக்கிறார்.