காலம் கணியும், காரியங்கள் தானாக நடக்கும், மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார், நாம் அதை பார்க்க போகிறோம் என பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் புகழ்ந்து பேசியுள்ளார். அவரின் பேச்சால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழா புதுக்கோட்டையில் உள்ள ஏடிஆா் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவை திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு மணக்களை வாழ்த்தினார். திமுகவையும் அதன் தலைவரையும் விமர்சித்து பேசுவது பாஜக தலைவர்களின் வாடிக்கை என்றிருந்து வரும் நிலையில் அனைத்திற்கு எதிர்மறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பி.டி.அரசகுமார் புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் பேசியதன் முழு விவரம் வருமாறு;- காலம் கணியும், காரியங்கள் தானாக நடக்கும், மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார், நாம் அதை பார்க்க போகிறோம். எம்.ஜி.ஆருக்கு பின் நான் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என கூறியுள்ளார். உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்த மு.க.ஸ்டாலின் என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பார். மு.க.ஸ்டாலின் முதல்வராக நினைத்திருந்தால் கூவத்தூர் பிரச்சனையின் போதே செய்திருப்பார். ஜனநாயக முறையில் முதல்வராக விரும்புபவர் மு.க.ஸ்டாலின் என பாஜக நிர்வாகி புகழாரம் சூட்டியுள்ளார். பி.டி.அரசகுமார் பேச்சு அரசியல் நாகரீகத்தின் அடிப்படையிலானது என்று சொல்லப்பட்டாலும் கூட ஸ்டாலினை இப்படி ஓபனாக புகழ்ந்துள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே திமுகவின் முன்னாள் இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்லத் திருமண விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.