முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் வசித்துவந்தனர். 
தமிழகத்தின் அரசியல், அரசு சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் இடமாக விளங்கிய போயஸ் கார்டன் வேதா இல்லம் ஜெயலலிதா மறைவு மற்றும் சசிகலாவின் சிறைவாசத்துக்குப் பிறகு அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. 

தற்போது போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.இதையடுத்து போயஸ் கார்டனில் பணிபுரிந்து வந்த சசிகலாவின் உறவுக்கார சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவர் வேறு இடத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். 

போயஸ் கார்டனில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவந்த சசிகலாவின் உறவினர்களான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கோதண்டபாணி, சீமாசாமி ஆகிய இருவரை மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அடுத்த அதிரடியாக போயஸ் கார்டன் முகவரியுடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த சசிகலாவின் பெயரும் நீக்கப்பட்டிருக்கிறது. கார்டன் முகவரியில்தான் சசிகலாவுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்துவந்த நிலையில், இது சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த  திங்கட்கிழமை, 5 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு காரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்ற ஒரு தொழில் அதிபர், சசிகலாவைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார். இதனால் அதிமுக, அமமுக வட்டாரங்களில்  பல புது விஷயங்கள் அரங்கேற  வாய்ப்புள்ளாதாக அரசியல் நோக்கர்கள். தெரிவிக்கின்றனர்.