Asianet News TamilAsianet News Tamil

என்னாச்சு திருமாவளவனுக்கு?: நாளுக்கொரு பேச்சு, வாரத்துக்கு ஒரு அணி, தேர்தலுக்கு ஒரு சித்தாந்தம்?

The most prominent among the contemporary Dalit leaders is Tirumavalavan leader of the Liberation Leopards Party
The most prominent among the contemporary Dalit leaders is Tirumavalavan leader of the Liberation Leopards Party
Author
First Published Jan 1, 2018, 5:40 PM IST


சமகால தலித் தலைவர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். படித்தவர், பேச்சாற்றல் மிக்கவர். தலித் என்பதால் மட்டுமே குறிப்பிட்ட இன மக்களுக்காக போராடாமல், சமத்துவ சங்கிலியின் ஒரு குறிப்பிட்ட கண்ணி அற்றோ அல்லது இற்றோ போய்விடாமல் இருப்பதற்காக சித்தாந்தங்களுடன் முன்னணி அரசியலுக்கு வந்த தலைவர். 

எம்.பி.யானார், அவரது கட்சி சில எம்.எல்.ஏ.க்களை பெற்றது! அரசியலில் வலுவாய் காலூன்றினார், சர்ச்சைகளை சந்தித்தார்! எல்லாம் நடந்தது, நல்லாவே நடந்தது. 

ஆனால் சமீப காலமாக அவரது செயலும், சொல்லும் சுவைக்கத்தக்க வகையில் இல்லை என நோகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 
என்ன காரணம்?

கடந்த பொது தேர்தலில் மக்கள் நல கூட்டணி உருவாவதில் வைகோவுடன் பெரும் பங்காற்றி தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் முயற்சியை தோற்கடித்தார். ஜெ., மறைவுக்குப் பின் மெதுவாக தி.மு.க.வை நோக்கி நகர துவங்கினார். இடையில் ரஜினி அரசியல் பரபரப்பு காட்ட ‘ஸ்டாலினை விட ஈர்ப்பான தலைவர் ரஜினி’ எனும் பொருள் பட பேசி தி.மு.க.வின் ஆத்திரத்தை சம்பாதித்தார். ரஜினி அரசியலை அப்படியே போட்டுவிட்டு காலா ஷூட்டிங்கில் கரைந்தார். 

இதனால் மீண்டும் தி.மு.க. மீது காதல் கொண்ட திருமா, கோயமுத்தூரில் நடந்த காங்கிரஸ் விழாவில் ‘தளபதி முதல்வராக வேண்டும்.உங்களுக்கு கைகொடுக்க நாங்கள் தயார்.’ என்று அறைகூவல் விடுத்தார். ஆர்.கே.நகரில் தி.மு.க.வுக்கு மனமுவந்து ஆதரவு கொடுத்தார். 

அங்கே தி.மு.க. டெப்பாசிட் இழந்திருக்கும் நிலையில், மீண்டும் ரஜினிகாந்தின் பரபரப்பு ஏற்பட்டு அவர் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதை வரவேற்றிருக்கும் திருமாவளவன் “ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மிக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் வெளிபப்டுத்தி இருக்கிறார்.” என்று சொல்லி இருக்கிறார். 

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான ரவிக்குமார் ‘சினிமா மோகத்திலிருந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருக்கும் தலித்துகள் மீண்டும் அதே புதைகுழியில் அமுங்கிவிடும் ஆபத்துதான் ரஜினியின் அரசியல் பிரவேசம்.’ என எதிர்த்திருக்கும் நிலையில் திருமாவின் வரவேற்பு அதிர்ச்சி தருகிறது. 

இந்த சூழலில் தி.மு.க.வுக்கு ஏன் ஆர்.கே.நகரில் ஆதரவு கொடுத்தோம் என்பதற்கு புதுவகையான விளக்கத்தை கொடுத்திருக்கும் திருமா “ஆர்.கே.நகரில் தங்கள் சார்பாக வேட்பாளரை நிறுத்தியிருந்தாலும் கூட அ.தி.மு.க.வை ஜெயிக்க வைப்பதுதான் பி.ஜே.பி.யின் நோக்கமாக இருந்தது. அதை முறியடிக்கவே தி.மு.க.வை நாங்கள் ஆதரித்தோம்.” என்றிருக்கிறார். 

கூடவே ரஜினி கட்சி ஆரம்பிட்த்து அவரது நிலைப்பாடுகள் தெரிந்த பின் ஆதரவு கொடுப்பது பற்றி முடிவெடுப்போம் என்றிருக்கிறார். 
திருமா! என்னாச்சு உங்களுக்கு? அம்பேத்கரை சொல்லி பொதுவாழ்வில் இயங்கும் நீங்கள், தற்போது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டை வெறுமனே ’சந்தர்ப்பவாதம்’ என்று சொல்லி கடந்துவிட முடியாது, அதையும் தாண்டி அபத்தமாக அல்லவா தெரிகிறது! என்கிறார்கள் விமர்சகர்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios