பட்டப்பகலில் பாஜ கவுன்சிலரை கூலிப்படை கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தில் நேற்று காலை பட்டப்பகலில் பாஜ கவுன்சிலர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டப்பட்டார்.

கேரளாவில் திருவனந்தபுரம்  பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்தவர் சஜி. இவர் மாநகராட்சி மேலாங்கோடு வார்டு  கவுன்சிலராக உள்ளார்.

நேற்று காலை சுமார் 9.45 மணியளவில் திருவனந்தபுரம்  கரமனை பாஜ செயலாளர் பிரதாப் என்பவருடன் அந்த பகுதியில் பைக்கில்  சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் பின்தொடர்ந்து வந்த கும்பல், அவர்களை வழிமறித்து சஜியை துரத்தி துரத்தி  சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.  தடுக்க முயற்சித்த பிரதாப்பையும் அந்த  கும்பல் சரமாரியாக வெட்டியது.

இதில் சஜிக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களிலும்  பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த இருவரும்  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர்.உயிருக்கு போராடும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.