டி.டி.வி.தினகரனை அணியில் இருக்கும் தைரியத்தில் சபாநாயகரின் கையை வெட்டுவேன் எனக்கூறிய ரத்தினசபாபதி எம்.எல்.ஏ வாக்குக் கொடுத்ததைப்போல ஒரே நாளில் விருத்தாசலம் கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,வையும் அதிமுகவுக்கு அழைத்து வந்து விட்டார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்தனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் கேட்கும் அளவு விவகாரம் முற்றியது. அப்போது பேசிய ரத்தினசபாபதி, தன்னை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் கையெழுத்திட்டால் அவரது கையை வெட்டுவேன் என மேடையிலேயே கூறினார். இந்தப்பேச்சு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. எல்லாம் தினகரன் அணியில் இருக்கும் தைரியத்தில் தான் இப்படி அவர் பேசுகிறார் என முணுமுணுக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு அந்த மூவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என தடை விதித்தது. இதனிடையே செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன்பாகவே அமமுகவில் இருந்து திமுகவுக்கு வெளியேறி பின்னர் அரவக்குறிச்சி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். திமுகவில் இந்த நிலையில் இரு தேர்தல்களிலும் டி.டி.வி.தினகரனின் அமமுக தோல்வியையே சந்தித்தது. இதையடுத்து அமமுகவிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற தொடங்கிவிட்டனர்.

தங்கதமிழ்ச் செல்வனும் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார். அமமுகவின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா, அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவுக்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டு வந்த அறங்தாங்கி எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’என்னை போல் பிரபுவும் கலைச்செல்வனும் மீண்டும் தாய்க்கழகத்துக்கே திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

அவர் சொன்னது போலவே ஒரே நாளில் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைசெல்வனை இன்று அழைத்து வந்து விட்டார். நாளையோ, நாளை மறுநாளோ கள்ளக்குறிச்சி பிரபுவையும் ரத்தினசபாபதி அதிமுகவுக்கு கூட்டி வந்து விடுவார். அப்போது கையை வெட்டி விடுவதாக கிளம்பிய ரத்தினசபாபதி, இப்போது அதிமுகவில் இணைந்த உடன் சொன்ன வார்த்தை இது தான், தடுமாறி தரம்மாறி விட்டேன். இப்போது தெளிவாக இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டேன்’ எனக்கூறி உண்மையிலேயே தடம் மாறி இருக்கிறார்.