ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் ரஜினி - கமலுடன் இணைந்து செயல்படலாமா? என கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கெனவே,  2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி இருக்கும் ரஜினி, இன்றைய கூட்டத்தில் புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அரசியல் களத்தில் நடிகர் ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் விருப்பம் தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கியது. அதன்பிறகு ரஜினிகாந்தும்- கமல்ஹாசனும் ஒருசேர ஒரே கருத்தை தெரிவித்தனர். தேவை ஏற்பட்டால் நிச்சயம் அரசியலில் ஒன்றிணைவோம் என்று அவர்கள் கூறியதை அடுத்து ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா? என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

இந்த கூட்டத்தில் கமலுடன் இணைவது குறித்து ரஜினி கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களுடைய மனநிலையை தெரிந்து கொண்டபின் ரஜினி வருங்காலத்தில் அரசியலில் கமலுடன் இணைந்து பணியாற்றுவாரா? என்பதை காலம் தீர்மானிக்கும்.