18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமான தீர்ப்பு என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் ஆதரவு 18 எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட குழு அப்போதைய ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.-க்களுக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்டார். அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் பேரவைத் தலைவர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார். 

இதையடுத்து, 18 எம்.எல்.ஏ.-க்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். பேரவைத் தலைவர் தனபாலின் தீர்ப்புக்கு எதிராக, பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 18 எம்.எல்.ஏ.-க்களின் வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் தகுதி நீக்கம் செல்லும் என்றும், மற்றொரு நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். இந்த மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை விசாரிக்கும் 3 ஆவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை உச்சநீதிமன்றம் நியமித்தது. 

வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும் எனவும் சபாநாயகர் முடிவில் தவறு இல்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். இது குறித்து அதிமுக தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமான தீர்ப்பு என்றும் அதிமுக ஆட்சியை விமர்சித்தால் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்றும், ஜெயலலிதாவின் ஆன்மாவைப்போல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.