உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாகவும் மற்றும் விரைவில் அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார்.
இதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை, நான்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் உக்ரைன் நாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

ஆகவே இதற்குத் தேவையான அனுமதிகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் விரைவாக வழங்கிட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் உக்ரைன் தமிழர்களை மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி உக்ரைன் தமிழர்களை மீட்க சிறப்புக் குழு ஒன்றை நியமித்து உள்ளார்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து டெல்லிவரும் தமிழக மாணவர்களை அழைத்து வர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி வந்தடையும் மாணவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடியும், மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் , சிறப்பு குழுவுக்கான பயணசெலவுக்கு ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.3.50 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு செய்தது.
