தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் புதிய தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்ய கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 1-ம் தேதி கூடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. தலைவர், பொருளாளர், முதன்மை நிலையச் செயலாளர் ஆகிய மூன்று பதவிகள் நிரப்பப்பட உள்ளதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவரானதும் முதல் நடவடிக்கையாக கட்சியை வலுப்படுத்த மாநில நிர்வாகிகளை மாற்றவும் அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கனிமொழிக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு கடந்த 14-ம் தேதி தி.மு.க.வின் செயற்குழு நடைபெற்றது. இதில், கருணாநிதியின் மறைவுக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அழகிரி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக கழக நிர்வாகிகள் எதுவும் பேசவில்லை. 
அழகிரியின் மோதல் போக்கு குறித்து கி.வீரமணி கடுமையாக விமர்சித்தார். விருந்து உண்ண வந்தவர்களைப் பற்றிப் பேச வேண்டியதில்லை எனக் கூற இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

ஆனால் அழகிரியின் மகன் திமுகவுக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். இதை அறிந்த ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 
அதில் தலைவரை இழந்த கழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் நம்மைவிட ‘அக்கறை’ காட்டுகிறார்கள் அரசியல் எதிரிகள். ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள். நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன். கழகத்துக்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அழகிரி பல்வேறு உள்அடி வேலைகளில் இறங்கியுள்ளார். கருணாநிதி இறந்து 30-வது நாள் நிகழ்வில் மெரினா கடற்கரையை நோக்கி அமைதிப் பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டிருக்கிறார். இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி வருவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். ஆனால் அழகிரி குறித்து ஸ்டாலின் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. வரும் 1-ம் தேதி தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக திமுகவின் முக்கிய நிர்வாகி கூறுகையில் திமுக தலைவர் கருணாநி இறந்த பிறகு நடக்கும் பொதுக்குழு என்பதால், யாருக்கெல்லாம் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  உயர் பதவிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் சீனியர்கள் இருந்து வருகின்றனர். தற்போது பொருளாளர் பதவியில் இருக்கும் ஸ்டாலின், அந்தப் பதவியை துரைமுருகனுக்குக் கொடுக்க இருக்கிறார். துரைமுருகன் வசம் இருக்கும் முதன்மை நிலையச் செயலாளர் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணன் எடுக்கப் போகும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன் என கனிமொழி கூறியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.