சட்டத்தின் மூலமாக நீதி கிடைக்காத பொழுது ”பல்லுக்கு பல், பழிக்கு பழி” என்ற அவலநிலை சமூகத்தில் உருவாகாதா? என உடுமலை கவுசல்யாவின் தந்தை விடுதலை விவகாரத்தை கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சியிம் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி.

உடுமலை சங்கர் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உடுமலை கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’நீதிமன்றங்கள் இந்த லட்சணத்தில் தீர்ப்புகள் வழங்கினால்... “வல்லான் வகுத்ததே வழி” என்ற நிலை உருவாகாதா? கர்ண கொடூரங்களை செய்துவிட்டு, தப்பித்து விடலாம் என்ற சூழ்நிலை உருவாகாதா? சட்டத்தின் மூலமாக நீதி கிடைக்காத பொழுது ”பல்லுக்கு பல், பழிக்கு பழி” என்ற அவலநிலை சமூகத்தில் உருவாகாதா?

திராவிட கட்சியினர் சமூகநீதி பேசுகிறார்கள், ஆனால், அவர்களுடைய ஆட்சியில் தான் 1957-ல் இம்மானுவேல் தேவேந்திரர் படுகொலை செய்யப்பட்ட போதும், 1968-ல் தஞ்சை மாவட்டம் கீழவெண்மணியில் 43 தேவேந்திரகுல வேளாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும்... சிவகங்கை உஞ்சனையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும், அதேபோல மாடக்கோட்டை கிராமத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடத்திய மாடக்கோட்டை சுப்புக் கொலை வழக்கிலும் நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகள் அனைவரும் தப்பித்துக் கொண்டார்கள். இப்போது உடுமலை சங்கர் வழக்கிலும் அதே நிலை.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கு. முக்கியக் குற்றவாளிகள் விடுதலை. பட்டப்பகலில் நடத்தப்பட்ட படுகொலைக்குப் பரிசளிப்பா? தேவேந்திரகுல வேளாளர்களுக்கு, இத்தீர்ப்பு அவர்களின் நெஞ்சில் எய்தப்பட்ட ஈட்டி. இந்த வழக்கை உள்நோக்கத்தோடு நடத்தி, தவறான தீர்ப்பு வழங்கக் காரணமாக இருந்த அ.இ.அ.தி.மு.க அரசை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பாக அனைத்து மாவட்டங்கள், ஒன்றியங்கள் அளவில் இம்மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.