கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து ஊழியர் கீழே தள்ளிய  வீடியோ வைரல் ஆனதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் காந்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 18 கோடி மதிப்பீட்டில் 8 அடுக்குகள் கொண்ட மாடி கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மேல்சிகிச்சைக்க இந்த அரசு தலைமை மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படுகின்றனர். இது மட்டுமின்றி புறநோயாளிகளாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் வெங்ககடேஷன்- திருமாத்தம்மா தம்பதியினர். 

இவர்களுக்கு கிருஷ்ணன், சுமித்ரா, கோபால் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். சுமித்ரா வாய் பேச முடியாதவர். 23 வயதுள்ள கோபால் கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிக்கப்பட்டு அவ்வப்போது கிருஷ்ணகிரி அரசு தலைமை சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கோபாலுக்கு வயிறு திடீரென வீங்கியதால் கடந்த 11ம் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கபட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோபாலுக்கு வயிற்றில் நீர் சேர்ந்து இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதித்தனர். அறுவை சிகிச்சை செய்வதற்காக வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்வதற்காக புதிய கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து கீழ் பகுதியில் உள்ள ஸ்கேன் எடுக்கும் அறைக்கு சக்கர நாற்காலி மூலம் மருத்துவமனை ஊழியர் பாஸ்கர் என்பவர் கோபாலை அழைத்து சென்றுள்ளார். 

ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் அவரது படுக்கைக்கு அழைத்து வந்த அந்த ஊழியர் கோபாலை படுக்கையில் ஏறி படுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் கோபாலால் யாருடைய உதவியுமின்றி எழமுடியவில்லை. இதனால் அந்த ஊழியர் கோபாலை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், எழமுடியவில்லை என்றால், படுக்கைக்கு கீழே தரையிலேயே படுத்துக்கொள்ளுமாறு திட்டியுள்ளார். ஆனால் கோபாலால் அதையும் செய்ய முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர் கோபாலை நோயாளி என்றும் பாராமல் சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்டு புறப்பட்டு விட்டார். இதே அங்கிருந்தவர்கள் வீடோயோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட அந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டதை அடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் பரமசிவம், அந்த ஊழியரை தற்காலிக பணியிடை செய்து உத்தரவிட்டுள்ளார்.