கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு..!அலர்ட்டாகும் காங்கிரஸ்- பாஜக
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதையொட்டி, கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.
கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. கார்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை காங்கிரஸ்- பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிப்பதற்கு குறைந்தது 113 இடங்களை பெற வேண்டும். இதற்காக காங்கிரஸ்- பாஜக தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.
பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைப்பதற்காக தீவிரமாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதே போல காங்கிரஸ் கட்சியும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் சார்பாக எந்த நேரத்திலும் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை 11.30 மணிக்கு அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.