The Election Commission has released the final list of nominees for RK Nagar.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் இறுதி பட்டியலை தேர்தல் அலுவர் வெளியிட்டுள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 

இதில் அதிமுக சார்பில் மதுசூதனும், திமுக வேட்பாளராக மருது கணேஷும், பாஜக சார்பில் கரு.நாகராஜனும், சசிகலா அணியில் டிடிவியும், சுயேட்சைகளாக நடிகர் விஷால், தீபா உள்ளிட்டோர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். 

மொத்தம் 135 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். இதன் பரிசீலனை கடந்த 4 ஆம் தேதி முதல் நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட சில சுயேட்சை வேட்பாளர்களின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டன. 

இதில் தீபாவின் நிராகரிப்புக்கு காரணம் அவர் படிவம் 26ஐ நிரப்பாமல் இருந்ததே என தேர்தல் அலுவலர் தெரிவித்தார். விஷாலின் மனு நிராகரிப்புக்கு காரணம் அவரை முன்மொழிந்த இரண்டு பேர் எதிராக வாக்குமூலம் அளித்ததே என கூறப்பட்டது. 

ஆனால் மதுசூதனன் தரப்பே காரணம் என விஷால் ஆடியோ ஆதாரத்துடன் நிரூபித்தும் எவ்வித பலனும் இல்லை. கடைசி வரை போராடி விஷாலால் ஜெயிக்கமுடியவில்லை. 

இதையடுத்து வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் அலுவலர் வேலுச்சாமி வெளியிட்டார். அப்போது, 72 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் இதில் 13 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார். 

மேலும் ஆர்.கே.நகரில் 59 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.