திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 1991 ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் இப்போது முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார். 

1991-1996ம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி வெர்றிபெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக வலம் வந்தவர். பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை துவக்கினார். 2001 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி. மு. க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006, ஆண்டு தனது கட்சியை கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தி..மு.க சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார். பிறகு 2009ல் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, அதிமுகவில் மீண்டும் இணைந்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரான ப.சிதம்பரத்திடம் தோல்வியுற்றார்.

பிறகு திமுகவில் இணைந்து தற்போதுமுதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடுக்கிறார். யாதவ சமுதாயத்தை சார்ந்த இவர் இந்த முறை திமுக வெற்றிபெற்றால் சமுதாயத்திற்கு ஒருவருக்கு அமைச்சர் பதவி என்கிற ரீதியில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார். ஆனால், 1996ல் திருப்பத்தூரில் இவர் நின்று வெற்றி பெற்ற திருப்பத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் சிட்டிங் திமுக எம்.எல்.ஏ.,வும், அங்கு மூன்று முறை வெற்றிபெற்றவரும், அதே யாதவ சமூகத்தை சேர்ந்த பெரியகருப்பன் போட்டியிடுகிறார். 

பெரியகருப்பன் முன்னாள் அமைச்சர், என்பதாலும், அவர் வெற்றிபெற்றால் தமது அமைச்சர் கனவு பணாலாகி விடும் என்பதாலும், பெரியகருப்பனின் வெற்றியை தடுக்க நினைக்கும் ராஜ.கண்ணப்பன் சில அஸ்திரங்களை ஏவிவிட்டுள்ளதாக கூறுகிறார்கள் சிவகங்கை மாவட்ட திமுகவினர். ராஜகண்ணப்பனுக்கு திருப்பத்தூர் தொகுதியில் இப்போதும் செல்வாக்கு உண்டு. அவர் முதன் முதலில் வெற்றிபெற்ற தொகுதி. அத்துடன் அவரது சொந்தபந்தங்கள் திருப்பத்தூர் தொகுதியில் அதிகம். ராஜ.கண்ணப்பன் மனைவி ஊரான அரளிக்கோட்டை, திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்டுத்தான் உள்ளது.

 

ஆகையால் யாதவ சமுதாயத்தை சார்ந்த இருவரும் வெற்றிபெற்றால் அமைச்சர் பதவிக்கு போட்டி நிலவும் என்பதால் ராஜ.கண்ணப்பன், பெரியகருப்பனின் வெற்றியை விரும்பவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.