The DMK will rule - Trichy Siva
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக அணிகளாக பிளவு பட்டு, இதன் பின்னர், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைந்தன. ஓ.பி.எஸ். துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
டிடிவி தினகரன் அணி தனியாக செயல்பட்டு வந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை, டிடிவி ஆதரவாளர்கள் வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இது தொடர்பாக சபாநாயகர் தனபால், விளக்கம் கேட்டு டிடிவி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் டிடிவி ஆதரவாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுக கொள்ளைப்புறமாக ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனாலும், எதிர்கட்சி என்ற முறையில் ஜனநாயக முறையில் தங்கள் செயல்பாடு உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி வந்தார். அது மட்டுமல்லாது கொள்ளைப்புறமாக திமுக ஆட்சியைப் பிடிக்காது என்றும் கூறி வந்தார்.
இந்த நிலையில், எம்.பி. திருச்சி சிவா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட கூறினார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வந்தாலும், திமுகவுக்கு கவலையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் காலத்தில் திமுகவைத் தவிர எந்தவொரு மனித சக்தியாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று திருச்சி சிவா கூறினார்.
