மதுரை கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி தன் ஊழல்களை சுட்டிக்காட்டிய நபரையும் அவர் குடும்பத்தையும் அவர் வீட்டிற்கே சென்று செருப்பால் அடிக்க துணிந்த அராஜக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக பாஜகவின் இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கரபாண்டி. மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தியின் ஊழல்களை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் திமுக ஒன்றிய குழு தலைவர் 14 லட்சம் கையாடல் செய்ததாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கவுன்சிலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் சங்கரபாண்டி. இதற்கு முன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல முறைகேடுகளை திமுக எம்.எல்.ஏ மூர்த்தி செய்துள்ளதாக சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் சங்கரபாண்டி. இந்நிலையில் நேற்று திமுக எம்எல்ஏ மூர்த்தி ஊழல் பணத்தில் எங்கெங்கே சொத்து வாங்கி உள்ளார் என்று வெளி உலகுக்கு கொண்டு வந்துள்ளார். இந்தச் செய்தி மக்களிடம் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி எம்.எல்.ஏ இன்று காலை திமுக நிர்வாகி சிலரை அழைத்து பாஜக மாநில செயலாளர் சங்கரபாண்டி இல்லத்திற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

அப்போது சங்கரபாண்டி, தன் மீது தவறு இருந்தால் வழக்கு பதிவு செய்யுங்கள் நான் வழக்கை சந்தித்து கொள்கிறேன் என கூறியதற்கு மூர்த்தியோ நான் வழக்கு பதிவு செய்வதாக இருந்தால் உன் வீட்டிற்கு வருகிறேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது பயந்துபோய் குறுக்கே வந்த சங்கர பாண்டியின் மனைவியை ஆபாச வார்த்தைகளால் திட்டிய திமுக எம்.எல்.ஏ., மூர்த்தி, ’உன் கணவனை சொல்லி வை’ என மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சங்கரபாண்டியன் மனைவியை பெண் என்றும் கூட பாராமல் செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்துள்ளார் மூர்த்தி. சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சம்பவம் சங்கரபாண்டி வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

அதில் சில காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து சென்று கொலை மிரட்டல் விடுத்த செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக இளைஞரணி சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ மூர்த்தி மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.