திமுக, மதிமுக நிர்வாகிகளின் பிள்ளைகள் ஹிந்தி படித்தால் அவர்களது குழந்தைகளின் டிசியை வாங்கி தமிழ் பள்ளியில் சேர்க்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, ’’திமுக, மதிமுக எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள், திக, திமுக, மதிமுக, மாநில, மாவட்ட, ஒன்றிய செயளாளர்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பற்றிய விவரம் திரட்டுவோம். அக்குழந்தைகளை இந்தி கற்பிக்கும் பள்ளியில் இருந்து டிசி பெற்று தமிழ் பள்ளியில் சேர்க்க வைக்கும் போராட்டம் துவங்க வேண்டியுள்ளது’’ எனப்பதிவிட்டுள்ளார். 

அதற்கு பெரும்பாலும் எதிர்ப்பு கிளம்பினாலும் சிலர் ஆதரவு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். ’நீங்கள் தமிழ்நாட்டில் தோற்கடிக்க பட்டதற்கு காரணமே உங்களைப் போன்றோர் தெரிவிக்கும் கருத்துக்கள் தான். நாங்கள் இந்தி'யே வரக்கூடாது என்று சொல்லவில்லை இந்தி திணிப்பு கூடாது என்று தான் சொல்கிறோம். ஏதுமே அவர் அவர் விருப்பப்படி நடக்க வேண்டும். நீங்களாகவே திணிக்கும் போது தான் பிரச்சனையே..’’

கூகுள் சி.இ.ஓ தமிழன்தான்... ஆனால், அவருக்கு தமிழ் தவிர்த்து ஆங்கிலமும் தெரியும்... அதனால் தான் அவர் அங்க இருக்காரு...  இந்தி படிச்சு என்ன ஆகப் போகுது? அதைப் படிச்சா நாளைக்கே இங்கே உள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு வேலை உடனே கிடச்சுடுமா? உறுதிபடுத்துங்க! வடநாட்டுக்காரங்க தமிழ் படிப்பாங்களா? இன்னிக்கு தமிழன் உலகெங்கும் போய் வேலை செய்யுரான்னா என்ன அர்த்தம்?அதுக்கு ஆங்கிலம் போதும்னு அர்த்தம்! ’’ எனவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதேவேளை,  ‘’1965 ல் பிறந்த நான், திமுக என்ற கட்சியின் மொழிக்கொள்கையால் ஹிந்தி கற்றுக் கொள்ளும் வாய்பை இழந்ததால் இந்தியாவில் பிறபகுதிகளுக்செல்லும்போது மிகவும் சிறமப்படவேண்டியுள்ளது &அரசு வேலை, அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க வாய்ப்பு பறிபோனது! ஹிந்தி கற்பதால் தமிழ் அழியும் என்பது மடமையானது சார்’’ என ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.