திமுக வரலாற்றில் முதன்முறையாக பொட்டு வைத்த வேட்பாளர்களின் புகைப்படத்தை அக்கட்சி தலைமை வெளியிட்டு புதுமை செய்து உடன்பிறப்புகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
திமுக வரலாற்றில் முதன்முறையாக பொட்டு வைத்த வேட்பாளர்களின் புகைப்படத்தை அக்கட்சி தலைமை வெளியிட்டு புதுமை செய்து உடன்பிறப்புகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 
கடவுள் மறுப்பு கொள்கையை அடிநாதமாக முழங்கி வந்த திமுகவில் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவர்களது பொட்டு வைத்த புகைப்படங்களை வெளியிடுவதை திமுக தவிர்த்தே வந்துள்ளது. தேர்வு செய்யப்படும் வேட்பாளர்களிடம் புகைப்படத்தை கேட்கும் போதே பொட்டு வைக்காமல் உள்ள புகைப்படங்களை மட்டுமே கேட்டு வாங்கி வெளியிடுவார்கள். ஒருவேளை பொட்டு வைத்த படங்களை வேட்பாளர்கள் கொடுத்தாலும் போட்டோஷாப் மூலம் பொட்டை அழித்து விட்டே புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக திமுக தலைமை வெளியிடுவது வழக்கம்.
விதிவிலக்காக பெண்கள் படத்தை பொட்டுவைத்து திமுக வெளியிடும். கருணாநிதி இருந்தவரை பொட்டு வைத்த வேட்பாளர்கள் புகைப்படத்தை வெளியிட்டதே இல்லை. மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ஜெகத்ரட்சகன் குங்குமப் பொட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர். அவர் அதிமுகவில் இருந்து வந்தவர். அத்தோடு ஆழ்வார்கள் மையம் அமைப்பையும் நடத்தி வருபவர். கடவுள் நம்பிக்கையில் ஊரித்திழைப்பவர்.
அத்தோடு வைரமுத்து, ஆண்டாள் சர்ச்சை எழுந்தபோது திமுகவிலிருந்து தைரியமாக தட்டிக் கேட்டவர் ஜெகத்ரட்சகன். ஆகையால் அவரது படத்தை பொட்டுடன் வெளியிட்டது திமுக தலைமை. அந்த வகையில் அவருக்கு முதன் முறையாக விதி விலக்கு கொடுத்தது திமுக. வீரமணி கிருஷ்ணர் பற்றி பேசிய விவகாரம் பற்றி எரிந்து வருவதால் இந்த தேர்தலில் இந்துக்கள் திமுக மீது அதிருப்தியுடன் உள்ளனர்.
ஆகையால், வெளிப்படையாகெவே மு.க.ஸ்டாலின், ‘’நாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல. என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை’’ என தன்னிலை விளக்கமளித்து வருகிறார். கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து சற்று பின் வாங்கியுள்ள திமுக 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அரவக்குறிச்சி, செந்தில் பாலாஜி, ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையா ஆகிய இருவரது புகைப்படங்கள் பொட்டு வைத்தபடி வெளியிட்டு இருக்கிறது திமுக. இதன் மூலம் நாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல. நாங்களும் பக்தி மான்களே என்கிற விஷயத்தை மக்களிடையே பதிவு செய்யும் வகையில் இந்த புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
