பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிர் இழந்தது விதி. எதிர்பாராமல் நடந்த விபத்தை அதிமுக மீது பழி போட்டு எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை, ஆவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து பேசினார். அப்போது, ’’ சுபஸ்ரீ இறந்தது எதார்த்தமாக நடந்த ஒரு விஷயம் தான். ஏனென்றால் இன்றைக்கு பேனர் வைக்காமல் யாரும் கிடையாது. எல்லோரும் வைக்கிறார்கள். அப்படி இருக்கின்ற நேரத்தில் அந்தப்பெண் அந்த வழியாகப் போகணும். பேனர் காத்துல வந்து விழுகணும். பின்னாடியே தண்ணீர் லாரி வந்து அந்தப் பெண் மீது ஏறணும். அவர் இறக்கணும் என்று விதி இருந்திருக்கிறது. 

பேனர் தடையை முதலில் ஏற்றுக்கொண்ட கட்சி தேமுதிக. பேனர் கட்டுவதால் உயிர் போகிறது என்றால் பேனர் வேண்டாம். சுபஸ்ரீ உயிர் இழப்பு எதிர்பாராத நிகழ்வு. சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும், லாரி வந்ததும் விதி. அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் இதனை பெரிதுபடுத்தியுள்ளார்.

தமிழை வியாபாரமாக்கிய ஒரே கட்சி திமுகதான். விஜயகாந்த்தை வைத்து மீம்ஸ் போட்டு ஏளனம் செய்தனர். விஜய பிரபாகரனுக்கு நடைபெறும் திருமணம் காதல் திருமணம் கிடையாது. பெரியவர்களாக பார்த்து நடைபெறும் திருமணம். தேமுதிக , அதிமுக கூட்டணியில் உள்ளது. இடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த், முதல்வரிடம் பேசி முடிவு எடுப்பார்’’ எனக் கூறினார்.