கொடுங்கையூர் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்பது தவறான தகவல் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். 
சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரி ஒன்றில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஏகராஜ் தீயில் கருகி உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் 47 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைதொடர்ந்து இந்த விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த ஸ்டாலின் சிகிச்சை சரிவர வழங்கபட வில்லை என சிலர் புகார் கூறியதாகவும், காயமடைந்த பலர் தனியார் மருத்துமணை நோக்கி செல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் இதுகுறித்து சட்டபேரவையில் குரல் எழுப்புவேன் எனவும் தெரிவித்தார். அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், கொடுங்கையூர் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ குழு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். 
சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு மருத்துவர்கள் மற்றும் 35 செவிலியர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது தவறான தகவல் எனவும் தெரிவித்தார்.