சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை  விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் தாக்கியதாலேயே அவர்கள் மரணமடைந்தததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இதை ஏற்ற நீதிமன்றம், அதுவரை சிபிசிஐடி போலீஸார் வசம் விசாரணையை ஒப்படைத்தது. இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் உள்ளிட்டோரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.