மு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்துள்ளதால், இங்கே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் இங்கே திறக்கப்படவில்லை.
இந்நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கொரோனோ காரணமாக தலைவர்கள் அவர்களின் வீடுகளிலே கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவர் எனவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி அரசு முடிவு செய்தபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் அறிவித்தார். அவரவர் வீடு முன் நின்று போராட்டம் நடத்தும்படி அப்போது ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று அதே பாணியில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பாஜகவும் போராட்டம் அறிவித்துள்ளது.