இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதிசெய்கிறார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் 5 மாதங்களுக்கு முன்பே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு தங்களது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் விருதாசலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மகாலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில்;-  ஜெயலலிதா இருந்தபோது ஓட்டு வாங்கி கொடுத்து விடுவார் அதனால் தைரியமாக இருந்தோம். இன்று நிலைமை அப்படி இல்லை எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாமல் பொதுத்தேர்தலை சந்திக்கப் போகிறோம். எம்ஜிஆர் வாரிசு  இரட்டை இலை தான். ஆனால் நமது சின்னத்தை முடக்க சிலர் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். 

இந்த தேர்தல் நமக்கு வாழ்வா சாவா என்கிற தேர்தல். தேர்தலில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். யார் எம்எல்ஏ ஆகிறோம் யார் மந்திரி ஆகிறோம் என்பது பற்றி கவலை இல்லை. கருப்பு சிவப்பு வெள்ளை கரை வேட்டியை கட்டி இருக்கும் நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். நமது கட்சியில் சில தலைவர்கள் வேண்டுமானால் கட்சிக்கு துரோகம் செய்திருக்கலாம். ஆனால் தொண்டர்கள் யாரும் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். கூட்டணிகள் இருந்தால் அவர்களுக்கும் சீட் ஒதுக்கப்படும். அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் நாம் வெற்றி பெற முடியும் என்றார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக சென்ற நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதன்பின் ஓ.பன்னீர்- எடப்பாடி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சின்னத்தை மீட்ட நிலையில், இப்போது மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.